R.V.SWAMINATHAN
R.V.SWAMINATHAN
விக்கிப்பீடியா
ஆர். வி. சுவாமிநாதன்
ஆர். வி. சுவாமிநாதன் இராமநாதபுரம் மாவட்டம் (சிவகங்கை) பாகனேரி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் வெள்ளையப்பத்தேவர், முனியாயிஅம்மா அவர்களுக்கு பிறந்தவர். இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு 1952 மற்றும் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு சார்பாக இரண்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்
மேலும் இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்தும் 1971 , 1977 சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்தும் 1980 இந்திய தேசிய காங்கிரசு சார்பாக மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் இந்திய தேசிய காங்கிரசின் மாநிலத் தலைவராக இருந்து திறம்படசெயல்பட்டவர்.
குற்றப்பரைச்சட்டத்தை நீக்குவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிப்பேசியவர்.
1961ஆம் ஆண்டு தமிழக முதல்வர் பதவிக்குப்போட்டியிட்டு திரு.பக்தவச்சலம் அவர்களிடம் சொற்பவாக்கில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார்.
1980ஆம் ஆண்டில் சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மத்திய விவசாய இணைஅமைச்சராக பொறுப்பேற்றார்.
ஆர். வி. சுவாமிநாதன் (ஆர்.வி.எஸ்)
முன்னாள் மத்திய இணைஅமைச்சர் / முன்னாள் தமிழக காங்கிஸ்கட்சித்தலைவர்/
சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர் /
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பாகனேரி இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு
அரசியல் கட்சி
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்
தையல்நாயகிமீனாட்சி
பிள்ளைகள்
டாக்டர் இந்திரா ராமநாதன், இராஜமார்த்தாண்டன், சாரதா, வசந்தா, நிர்மலா, பத்மினி, ஜெயம், அசோக்குமார், பிரேம்குமார், கிஷோர்குமார்.
வாழ்க்கை வரலாறு
அன்றைய இராமனாதபுரம் மாவட்டம் பாகனேரி வரலாற்றுப் புகழ் கொண்ட ஊர்.
அந்த ஊரில் வாழ்ந்த வெள்ளையப்பத் தேவருக்கு 1910, ஆகஸ்ட் 5இல் மகனாகப் பிறந்தவர் காங்கிரஸ் தலைவர், தியாகி ஆர்.வி.சுவாமி நாதன். இவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம். சமூக சேவையில் நாட்டம் கொண்ட இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னுடைய 19ஆம் வயதிலேயே தன்னை முழு மூச்சுடன் இணைத்துக் கொண்டார். இவர் தன்னுடைய உண்மையான உழைப்பாலும், நேர்மையாலும் காங்கிரஸ் தொண்டராக இருந்து படிப்படியாக உள்ளூர் காங்கிரஸ் கமிட்டி முதல், தாலுகா கமிட்டி, மாவட்ட கமிட்டி, மா நில கமிட்டி என்று பதவி உயர்ந்து தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராகவும், மத்திய அமைச்சரவையில் விவசாயத்துறை துணை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் திறமையாகப் பணிபுரிந்து, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, காமராஜ் ஆகியோருடைய பாராட்டுக்களைப் பெற்றவர்.
வெளிநாட்டுப் பயணங்கள்
இந்திய நாடாளுமன்ற குழுவோடு இவர் நியுசிலாந்து, ஸ்வீடன், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஹாலந்து, இங்கிலாந்து, கொரியா, பிலிப்பனிஸ் போன்ற நாடுகளுக்கும் ஸ்காண்டினேவியன் நாடுகள் எனப்படும் டென்மார்க், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார்.
அகில உலக விவசாய மாநாட்டுக்காகவும் இவர் வெளிநாடு பயணம் செய்திருந்தார்.
குற்றப் பரம்பரை தடுப்புச் சட்டம்
தமிழகத்தில் தேவர் வகுப்பு பின் தங்கிய ஜாதியாக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
(பிற்பட்ட இந்த ஜாதியார்தான் தமிழகத்தில் பெரும்பான்மையான தனிப்பெரும் குழுவாகவும் இருந்தனர்)
. பிரித்தானிய ஆட்சி காலத்தில் இந்த வகுப்பினருக்குப் பல கொடுமைகளை பிரித்தானிய அரசு அளித்து வேட்டையாடியது. இந்த கொடுமையான சட்டத்தை நீக்கி இவர்களின் நிலை உயர 1947-48 காலகட்டத்தில் சென்னை சட்டசபையில் சட்டம் கொண்டு வந்து இவர்களின் விடிவெள்ளியாக உருவானார் ஆர்.வி.சுவாமி நாதன். அரசியலில் நுழைந்த நாள் முதல் தனது கடைசி மூச்சு ஓயும் வரையிலும் ஒரு சுத்தமான காந்தியவாதியாகவும், காந்தி விரும்பிய உண்மையான காங்கிரஸ்காரராகவும், உயர்ந்த பண்பாளராகவும் வாழ்ந்து காட்டியவர் ஆர்.வி.எஸ்.
இந்திராவின் காவலர்
மேலும் காங்கிரஸ்காரராக இருந்த போதோ அல்லது இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை புகுந்தபோதோ, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோது கிடைக்காத பெயரும், புகழும், விளம்பரமும் இவர் செய்த ஒரு வீரதீர சாகசத்தினால் ஏற்பட்டது.
ஒரு முறை இந்திரா காந்தி தமிழ் நாட்டுக்கு வந்தபோது மதுரை வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் வன்முறை ஆர்ப்பாட்டமாக மாறியது. திறந்த ஜீப்பில் பயணம் செய்து கொண்டிருந்த இந்திரா காந்திமீது கல்லும், தடிகளும் வீசப்பட்டன. கும்பல் அருகில் வந்து தாக்கவும் தொடங்கினர். அவர் இருந்த ஜீப் மீது கற்கள் விழுந்து கொண்டிருந்தன.
அப்பொது அருகில் இருந்த ஆர்.வி.சுவாமி நாதனும், மதுரை நெடுமாறனும், இந்திரா காந்திமீது கற்கள் விழாமலும், அவர் அடிபடாமலும் அவருக்குக் கேடயமாக இருந்து காப்பாற்றினார்கள்.
அந்த செய்தி மறு நாள் செய்தித் தாள்களில் வந்தபோது ஆர்.வி.சுவாமி நாதனுக்கு அதுவரை கிடைக்காத பெயரும், புகழும் பாராட்டுகளும் வந்து குவிந்தன.
இறப்பு
1984 அக்டோபர் 4 ஆம் நாள் உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையிலேயே காலமானார்.
